×

ஏர்வாடி பகுதியில் புனித குளத்தில் கழிவுநீர் கலப்பு: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

கீழக்கரை, பிப்.18: ஏர்வாடி தர்ஹாவில் புனித குளம் சாலையின் ஓரத்தில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் விழுந்து பல மாதங்கள் கடந்தும் சீர் செய்யாமல் உள்ளதால் வாகனங்கள் உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏர்வாடியில் புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் தர்ஹா உள்ளது. இந்த தர்ஹா அருகில் புனித குளம் என்று அழைக்கப்படும் சம்பா குளம் உள்ளது. இந்த குளத்தில் தர்ஹாவிற்கு வரும் மனநோயாளிகள் தொடர்ந்து குளித்தால் மனநோய் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் தினமும் குளிக்க வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து யாரும் உள்ளே போக முடியாத நிலையில் இருந்தது. இதை தனியார் விடுதி வைத்து நடத்துபவர்கள் சிலர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அந்த குளத்தில் விட்டு வருவதால் குளம் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்த பஸ் நிலையத்திற்கு திரும்பும் இடத்தில் உள்ள சுற்று சுவருக்கு அடியில் கடந்த பல மாதங்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கடந்த 30.11.2019அன்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதை ஊராட்சி அதிகாரி மெத்தனமாக நினைத்ததால் சில தினங்களிலேயே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில் பஸ் நிலையத்திற்கு திரும்பும் இடமாக இருப்பதால் வாகனங்கள் உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. ஆகவே ஊராட்சி நிர்வாகம் உடன் இந்த சுற்றுச்சுவரை ச ரிசெய்தும், குளத்தில் கலக்கும் கழிவுநீரை நிறுத்தி குளத்தை சுத்தம் செய்தும் பக்தர்கள் உள்ளே சென்று குளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இந்த புனித குளத்தில் பல வருடங்களாக கழிவு நீர் கலக்கின்றது. இதை தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் தற்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. ஆகவே இந்த குளத்தின் சுற்றுச்சுவரை சரி செய்து மக்கள் உள்ளே சென்று குளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...