×

அங்கன்வாடி கட்டி கொடுக்கக் கோரி பேரையூர் தாலுகா அலுவலகத்தை இழுத்து பூட்டி முற்றுகை போராட்டம்

பேரையூர், பிப். 18: அங்கன்வாடி மையத்தை கட்டிடத்தர வலியுறுத்தி பேரையூர் தாலுகா அலுவலகத்தை பூட்டி இந்திராகாலனி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பேரையூர் அருகே சந்தையூர் உள்ளது. இங்கு உள்ள இந்திரா காலனியில் இரு பிரிவினர்களிடையே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதில் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கோயில் சுவர் என்றும், மற்றொரு பிரிவினர் தீண்டாமைச்சுவர் என்றும் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. அதில் ஒருபிரிவினர் சந்தையூர் இந்திரா காலனியில் தீண்டாமைச்சுவரை அகற்றக்கோரி ஊரைக்காலி செய்து மலையடிவாரத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர். இதில் இருபிரிவினர்களிடையே அப்போது இருந்த மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு கட்டுப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் வடக்குப்பகுதியில் 2மீட்டர் அளவில் சுவரை உடைத்து அங்குள்ள காலியிடத்தில் இரு பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் அங்கன்வாடியோ அல்லது சமுதாயக்கூடமோ கட்டிட உத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில் பேரையூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் செல்லும் நுழைவு வாயிலின் கேட்டை தமிழ்ப்புலிகள் அமைப்பினர் பூட்டி போராட்டம் நடத்தினர். மாவட்டத்தலைவர் சந்தையூர் அறிவாளன் தலைமையில் இந்திராகாலனி பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``சந்தையூர் இந்திரா காலனியில் உள்ள அங்கன்வாடி தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அன்றைய மதுரை கலெக்டர் வீரராகவராவ் கூறிய இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான வேலைக்கான உத்தரவு வந்துள்ளது. மாவட்டநிர்வாகமும், நீதித்துறையும், உத்தரவிட்டும் ஏன் அலட்சியம் செய்கிறார்கள். மேலும் அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டநிலஅளவீடு செய்து தராமல் வருவாய்த்துறையும், ஊராட்சித்துறையும் காலம்தாழ்த்தி வருகிறது. மேலும் சந்தையூரில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பிரச்னைகளையும் இப்பிரச்னையில் இணைத்து எங்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது’’ என்றனர். தகவலறிந்து வந்த பேரையூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா தலைமையிலான போலீசார், போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விஏஓ மணிவண்ணன், தாசில்தார் சாந்தியிடம் ஒப்புதல் பெற்று பிப்.25ம் தேதி அங்கன்வாடி கட்டக்கூடிய இடத்தை அளவீடு செய்து அங்கன்வாடி கட்ட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சந்தையூர் இந்திராகாலனி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.­ இப்போராட்டத்தால் பேரையூரில் பரபரப்பு நிலவியது.

Tags : lockdown ,taluk ,office ,Anganwadi ,
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்