×

பட்டா தராமல் 2 ஆண்டாக இழுத்தடிப்பு கருணை தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தம்பதி மனு திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

திண்டுக்கல், பிப். 18: பட்டா தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருணை தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தம்பதி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டி கிராமம், நாச்சக்கோனான்பட்டியை தம்பதி தங்கராஜ்- பொன்னம்மாள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தம்பதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் கருணை தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி மனு வழங்கினர்.அந்த மனுவில், ‘நாங்கள் திண்டுக்கல் மேற்கு வட்டம் குட்டத்துப்பட்டி கிராமம் புல எண் 669, 638 பட்டா கேட்டு கடந்த 2 வருடங்களாக அலைந்து அவமானப்பட்டும், அசிங்கப்பட்டும், பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பணிபுரியும் விஏஓ, சர்வேயர்கள், தலைமை சர்வேயர் ஆகியோர் எங்களிடம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் பெற்று கொண்டு பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கலெக்டர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு நேரிலும், தபால் மூலகவும் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தோம். மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். ஏற்கனவே கொடுத்த பணத்தை 5 சதவீத வட்டிக்கு வாங்கி கொடுத்து இன்னும் வட்டி கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் பிஎம் கிசான் திட்டத்தில் மனு செய்தோம். அதையும் வேண்டுமென்றே நிராகரித்து உதவித்தொகை வரவில்லை. ஆனால் பிஎம்ஐ கிசான் திட்டத்தின் மூலம் 2000+2000 என மொத்தம் ரூ.4000 பெற்றுள்ளார்கள். ஆனால் வரவில்லை. ஏன்? என்று கேட்டால் கேலியும் கிண்டலுமாக விஏஓ பேசி வருகிறார். அதனால் நாங்கள் வாழ்வதா? சாவதா? என்று தெரியாமல் தான் கருணை தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்தோம் எனவே பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பணம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் இதுபோல் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு