×

வத்தலக்குண்டு- நிலக்கோட்டை இடையே சாலை அகலப்படுத்தும் பணி மும்முரம் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டுகோள்

வத்தலக்குண்டு, பிப். 18: வத்தலக்குண்டு- நிலக்கோட்டை இடையே சாலை அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வத்தலக்குண்டுவில் இருந்து நிலக்கோட்டை வரை சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பசுமையை காக்கும் விதமாக நடந்து வரும் இப்பணியில் சாலையின் இருபுறமும் மரங்களை வெட்டாமல் தேவையான கிளைகளை மட்டும் அகற்றி தலா 6 அடி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கோட்டை அருகே கருப்பணசாமி கோயிலையொட்டி பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இப்பணியில் 5 பொக்லைன்கள், 10க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் ஆலோசனையின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி பொறியாளர்கள் அன்பையா, சக்திவேல் ஆகியோர் சாலை அகலப்படுத்தும் பணியினை பார்வையிட்டனர். அப்போது சில இடங்களில் வாகனங்கள் அதிவேகமாக சென்றதை கண்டு அவர்கள் கூறுகையில், ‘வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலை பணிக்கு இடையூறு ஏற்படும். மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாகனஓட்டிகள் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கும் பகுதிகளில் மெதுவாக செல்ல வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Road ,Vattalakundu - Nilakkottai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...