துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் கலெக்டரிடம் மனு

நெல்லை, பிப். 18: களக்காடு சிதம்பராபுரம் சாலையை சீரமைக்க கோரியும், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் கேட்டும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்பை அருகே சிவந்திபுரம் இந்திரா காலனியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனு: அம்பை சிவந்திபுரம் ஊராட்சியில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு துப்புரவு பணிக்கான பாதுகாப்பு சாதனங்கள் சோப்பு, துணி, கையுறை, காலுறை, செருப்பு போன்ற பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை. மேலும் குப்பை அள்ள பயன்படுத்தும் லாரி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. 6 மற்றும் 7வது ஊதிய குழு பணபலன்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டால் அதிகாரிகள் இழிவாக பேசுகின்றனர். எனவே எங்களுக்குரிய பணபலன்களையும், பாதுகாப்பு சாதனங்களையும் தருவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சி பாரதம் கட்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் வேதக்கண் தலைமையில் கட்சியினர் அளித்த மனுவில், ‘‘களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் முதல் கேசவனேரி முஸ்லிம் தெரு வரையிலான சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளங்களால் அங்கு வாகன விபத்துகளும் நடக்கின்றன. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே கல்லடி சிதம்பராபுரம் முதல் கேசவ நேரி சாலையை போர்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: