சிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு

ஏரல், பிப். 18: சிவகளை தபால் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக நிலவும் சர்வர் கோளாறால் அவதிப்படும் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அடுத்த சிவகளையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தபால் நிலைத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு துவங்கி அதிக அளவில் பணத்தை வைப்பு வைத்துள்ளனர்.  ஆனால், இங்குள்ள இணையதளம் அவ்வப்போது சரிவர செயல்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக நிலவும் சர்வர் கோளாறால் பொதுமக்கள், பணம் செலுத்த முடியாமலும், எடுக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். இதனால் இதுபோன்ற பயன்பாட்டுக்கு சிவகளையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வைகுண்டம் செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் முதியவர்களும், பெண்களும் மிகவும் சிரமப்படுவதாக சிவகளை காங்கிரஸ் தலைவரும், பஞ்சாயத்து கவுன்சிலருமான பிச்சையா உள்ளிட்டோர் வேதனையுடன் கூறினர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் அனைவரையும் திரட்டி தொடர் பேராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி சிவகளை தபால் நிலையத்தில் தேவையான வசதிகள் செய்துதர குறிப்பாக இணையதளத்தை சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: