பொது கழிப்பிடம் கட்ட அனுமதி மறுப்பு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி,  பிப். 18: வில்லிசேரியில் பொதுகழிப்பிடம் கட்ட  அனுமதி வழங்கப்படாததால் ஆவேசமடைந்த கிராம மக்கள் கோவில்பட்டி  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.   கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில்  பத்திரகாளியம்மன் கோவில் தெரு மற்றும் இதர தெருக்களை சேர்ந்த மக்களின்   பயன்பாட்டிற்காக அரசால்  பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது.     தொடர்ந்து பராமரிக்கப்படாததால் பொது கழிப்பிடம் சிதிலமடைந்தது. மேலும் பொதுகழிப்பிட   இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிக்க முயற்சி  செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மக்கள் இதை தடுத்து நிறுத்திடவும், ஊராட்சிக்கு சொந்தமான அந்த  இடத்தில் புதியதாக பொதுகழிப்பிடம் கட்டித்தர அனுமதி வழங்கவும் கோரி  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இதன்படி தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் காசிராஜன், பரமேஸ்வரன் முன்னிலையில் வில்லிசேரி கிராம மக்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை  நேற்று காலை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்த தங்களது  கோரிக்கை மனுவை ஒன்றிய ஆணையாளர் மாணிக்கவாசகத்திடம் அளித்தனர். மனுவை பெற்று  கொண்ட அவர் உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Related Stories: