×

குழந்தைகள், பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் தூத்துக்குடி கோர்ட்டில் விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி, பிப்.18: குழந்தைகள், பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்து தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் திரளாகப் பங்கேற்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்  சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள்  என திரளானோர் பங்கேற்றனர்.  முகாமிற்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மற்றும் ஏடிஎஸ்பி  குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், காவல்துறை அதிகாரிகளுக்கு சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், பாதிக்கப்பட்டோர் நஷ்டஈடு திட்டம் 2013, பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்டஈடு திட்டம் 2018, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நஷ்டஈடு திட்டம் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் திட்டம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும்  குழந்தைகள் நஷ்டஈடு தொகை பெற நீதிமன்றம் மூலமாகவும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாகவும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதிமன்றம் மூலம் நஷ்டஈடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக 10 பெண் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்தும் அவர்கள்  மூலம் விரைவாக நஷ்டஈடு பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Awareness meeting ,women ,Tuticorin Court ,children ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்