×

2ம் போக சாகுபடி இல்லாததால் கோடையில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம்

கடத்தூர், பிப்.18: தர்மபுரி மாவட்டத்தில் 2ம் போக சாகுபடி இல்லாததால், கோடையில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு மூலம், நேரடியாக 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய் இணைப்புகள் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆற்றை ஒட்டியுள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், கடத்தூர் ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது முதல் போக சாகுபடியில் நெல் அறுவடை முடிந்து, அதில் இருந்து கிடைக்கும் வைக்கோலை சாலையோரம் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கால்நடைகளுக்கு முக்கிய உணவான வைக்கோலை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோரம் வசிக்கும் விவசாயிகள் நேரில் வந்து, வைக்கோலின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் உள்ளதாலும், வைக்கோலுக்கு விலை அதிகரித்து வரும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கால்நடைகளுக்கு முக்கிய உணவான வைக்கோல் விற்பனை மூலம், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். தற்போது, முதல் போகத்தில் அறுவடையின் போது, போதிய மழையால் வைக்கோல் விலை குறைந்துள்ளது. இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட வைக்கோல் உலராமல், அதன் வாசம் குறைந்துள்ளதால் ஒரு டிராக்டர் லோடு வைக்கோல் ₹10ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரை விற்பனையாகிறது. வைக்கோலில் வாசம் இருந்தால் மட்டுமே மாடுகள் விரும்பி உண்ணும். மேலும், கையால் நெல் தூற்றி கிடைக்கும் வைக்கோலில் வாசம் அதிகம் இருக்கும் என்பதால், அந்த வைக்கோல் டிராக்டர் லோடு ₹14ஆயிரம் வரை விற்பனையாகிறது. கோடையில் 2ம் போக சாகுபடியில் கிடைக்கும் வைக்கோல், வாசம் மிகுந்ததாக இருக்கும் என்பதால் விலை கூடுதலாக கிடைக்கும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா