×

நிலப்பிரச்னையில் நடவடிக்கை கோரி மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

கிருஷ்ணகிரி, பிப்.18: நிலப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, குழந்தைகளுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, பாரூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கருவேப்பிலை  கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). விவசாயியான இவர், நேற்று மதியம் தனது மனைவி  சரோஜா(32),  4 வயது பெண் குழந்தை மற்றும் 11 மாத ஆண் குழந்தையுடன், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, திடீரென கையில் மறைத்து வைத்திருந்த சிறிய பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீதும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீதும் ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு திடுக்கிட்ட அந்த வழியாக சென்றவர்கள், எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை அவரிடம் இருந்து தட்டி விட்டனர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து போலீசாரிடம் கணேசன் கூறியதாவது: விவசாயம் செய்து வரும் எனக்கும், எனது சகோதரிகளுக்கும் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக ஊத்தங்கரை சார்பு நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி, எனது நிலத்திற்கு சிலர் வந்து என் மனைவி சரோஜாவை தாக்கினா். இதில், தலையில் காயமடைந்த அவர், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து, சிலர் என்னிடம் வந்து, தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கக் கூடாது. அவர்கள் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என கூறி  மிரட்டினர். மேலும், பாரூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 2 போலீசார் வந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு செல்லுமாறு மிரட்டல் விடுத்தனர். ஆனால், நாங்கள் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் , மனம் உடைந்த நிலையில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றேன். எனது மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அவரையும், குடும்பத்தினரையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் மீது மண்ணெண்ணை ஊற்றியதால், உடலில் அரிப்பு ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் கதறியழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...