×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஓசூரில் மார்ச் 8ல் பேரணி

ஓசூர், பிப்.18: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, ஓசூர் மக்களை ஒன்று திரட்டி வரும் மார்ச் 8ம் தேதி  பேரணி நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது:தேசிய குடியுரிமை  திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று மோடி அறிவித்திருக்கிறார். அவர் ஆட்சியில் இருந்து இறங்க, இப்போராட்டம் தான் அடிப்படை காரணமாக அமையப் போகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று 13 மாநிலத்தில் அறிவித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராட்டக்களத்தில் குதித்துள்ள நிலையில், மோடியின் அறிவிப்பானது அவரது சர்வாதிகார மனப்பான்மையை காட்டுகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும். யானைகளையும் பாதுகாக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, ஓசூரில் அனைத்து பகுதி மக்களையும் ஒன்று திரட்டி, வரும் மார்ச் 8ம் தேதி மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம். இதில், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு