×

மங்களபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

நாமக்கல், பிப்.18: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் மெகராஜிடம், மங்களபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு விபரம்: மங்களபுரத்தை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் பஸ்வசதி அதிகம் இல்லை. மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, சுமார் 10 ஆண்டாக இயக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ், கடந்த 3 மாத காலமாக இயக்கப்படாமல் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராசிபுரம் மருத்துவமனை அல்லது 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை செல்வதால், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் விஷ ஜந்துகள் கடித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக வாடகை வசூலிக்கிறார்கள். எனவே, மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின், நாமக்கல் நகர தலைவர் மகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்: நாமக்கல்லில் 200 குடும்பத்தினர் சவரத் தொழில் செய்து பிழைப்பு நடத்துகின்றனர். அனைவரும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சலூன் கடைகளுக்கு தேவையான நாற்காலி மற்றும் ஆயுதங்களை இலவசமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Mangalore ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்