×

அமைச்சர் பெயரை சொல்லி பெண் பஞ். தலைவரை மிரட்டிய போலீஸ்காரர்

சேலம், பிப்.18: சேலம் அருகே அமைச்சர் பெயரை சொல்லி பெண் பஞ்சாயத்து தலைவரை போலீஸ்காரர் மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள், தனது ஆதரவாளர்களுடன் கையில் பதாகைகள் ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பதாகைகள் அவர்களிடம் இருந்து பறித்தனர். இதுகுறித்து செல்லம்மாள் கூறுகையில், “ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். ஊராட்சி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், அவரது வீட்டருகே உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி தெரிவித்தார். இதனை மனுவாக கொடுக்க அறிவுறுத்திய நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில், சம்பந்தப்பட்ட நபரே அவர் இருக்கும் பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். மேலும், அவருக்கு வேண்டாதவர்களை பழிவாங்கும் நோக்கோடு, ஆக்கிரமிப்பு புகார் தெரிவித்து, வீடுகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாயத்து அலுவலகம் வந்து என்னை தாக்க முயற்சித்தார். மேலும், தான் காவல் துறையில் இருப்பதாகவும், அமைச்சருக்கு நெருக்கமானவர் எனவும் கூறி, கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இதேபோல், சேலம் அம்மாப்பேட்டை வைத்தி உடையார்காடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் அளித்த மனுவில், எனது வீட்டு பத்திரம் கடந்த 2018ம் ஆண்டு தொலைந்து விட்டது. இதற்கு மாற்று பத்திரம் வழங்க கோரி பலமுறை மனு அளித்துள்ளேன். எந்த மனு மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறியதுடன், கடந்த 2 ஆண்டுகளாக அவர் அளித்த மனுக்களின் நகல்கள் அடங்கிய பெட்டியை தலையில் சுமந்தவாறு கலெக்டர் அலுவலகம் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : policeman ,minister ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...