ஓமலூர் தனியார் நிதி நிறுவனத்தில் ₹52 ஆயிரம் கையாடல் செய்த மேலும் ஒரு ஊழியர் கைது

சேலம், பிப்.18: ஓமலூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ₹52 ஆயிரம் கையாடல் செய்த மேலும் ஒரு ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஓமலூர் 12வது வார்டு காமராஜர் நகரில், தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மேலாளரான ஆத்தூரை சேர்ந்த சின்னதுரை (35), மாவட்ட எஸ்பி தீபாகனிகரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தங்கள் நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வரும் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜ் (30) என்பவர், ₹30 லட்சத்திற்கு மேல் கையாடல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில், வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் ₹30.23 லட்சத்தை கேஷியர் நாகராஜ் கையாடல் செய்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து நாகராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நிறுவனத்தில் பணியாற்றிய கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேலும் கையாடல் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பின்னர், நாகராஜை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ₹52 ஆயிரம் கையாடல் செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நேற்று சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: