தம்மம்பட்டியில் பரபரப்பு மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு அடி, உதை

தம்மம்பட்டி, பிப்.18: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி தண்ணீர் பந்தல் கிராமம் மேல வீதியில், மூதாட்டி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சின்னதம்பி. இவர்  நேற்று காலை, வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்து, பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது, அந்த பெண் வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு சத்தம் போட்டுள்ளார். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டதுடன், பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர் சின்னதம்பியை பிடித்து இழுத்துச்சென்று, அருகே உள்ள மாரியம்மன் கோயிலில், கம்பம் ஒன்றில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

 இதுகுறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தம்மம்பட்டி போலீசார், டிரைவர் சின்னதம்பியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை தம்மம்பட்டி- துறையூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சின்னதம்பி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

 இதனால் சமாதானமடைந்த மக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர். இந்த மறியலால் தம்மம்பட்டி- துரையூர் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: