×

ஒரத்தநாடு பகுதியில் காய்கறிகளை பயிரிட்டு 60 நாட்களில் ரூ.7 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி

ஒரத்தநாடு, பிப். 18: ஒரத்தநாடு பகுதியில் காய்கறிகளை பயிரிட்டு 60 நாட்களில் ரூ.7 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயியை தோட்டக்கலை அதிகாரிகள் பாராட்டினர்.ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த விவசாயி பரமசிவம். இவர் ஒரத்தநாடு வேளாண்மை தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 100 சதவீத மானியத்தில் விதைகாய்கறிகள், பயிரிடும் பகுதிகளில் நிலப்போர்வை சொட்டுநீர் பாசனம், காய்கறிகளை வளர விடுவதற்கான பந்தல் ஆகியவை பெற்று பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவை பயிரிட்டு 60 நாட்களில் ரூ.7 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை புரிந்துள்ளார்
\
இதுகுறித்து விவசாயி பரமசிவம் கூறியதாவது: ஒரத்தநாடு வேளாண்மை தோட்டக்கலை சார்பில் தோட்டக்கலை உதவி அதிகாரி செந்தில்குமார், விவசாயிகளை தேர்வு செய்து மானிய விலையில் விதைகளை வழங்கி வருகிறார். நெல், தென்னை, வாழை சாகுபடியை விட அதிகளவு லாபம் சம்பாதிக்கும் காய்கறி பயிர்களை டெல்டா பகுதி விவசாயிகள் பயிரிட்டு அதிக மகசூலை பெற்று மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வாழ்வில் உயரலாம் என்பது நான் கண்கூடாக பார்த்தது.

அரசு மானிய விலையில் தோட்ட கலையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உற்சாகத்தை தருகிற விதத்தில் சொட்டுநீர் பாசனம் செய்யும் வசதியும் வழங்கி வருகிறது. மாற்று பயிரை பயிரிட்டு விவசாயிகள் தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். ஒரு ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை சார்பில் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு மானியத்தை தோட்டக்கலை நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒரத்தநாடு தோட்டக்கலை நிர்வாகம் விவசாயிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து லாபம் ஈட்டுவதற்கு உறுதுணையாக இருக்கிறது.எனது காய்கறி தோட்டத்தை தோட்டக்கலை அதிகாரிகள் பார்வையிட்டு வைரஸ் பாதிக்காமல் பூச்சி பிடிக்காமல் இருப்பதற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். விவசாயிகள் இந்த மாதிரியான காய்கறிகளை பயிரிட வருமாறு தோட்டக்கலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ஒரு டன் காய்கறியை ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மொத்த வியாபாரத்தில் விற்க முடிகிறது. அதிக லாபத்தை தரும் காய்கறிகள் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார்.காய்கறி பயிரிட்டு அதிக லாபம் பெறும் விவசாயி பரமசிவத்தை தோட்டக்கலை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Tags :
× RELATED கல்லணை அருகே பைக் மீது கார் மோதல் 3 பேர் காயம்