×

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டில் வசதி இல்லாததால் தரையில் உறங்கும் நோயாளிகள்

கும்பகோணம், பிப். 18: கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய கட்டில் வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்துறங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது.இங்கு தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு உள்நோயாளியாக 500க்கும் மேற்பட்டோரும், வெளிநோயாளிகளாக 1000க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கும்பகோணம் மருத்துவமனையில் வெளிமாவட்ட மற்றும் கும்பகோணத்தை சுற்றிலும் உள்ள பகுதியில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வார்டுகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்துறங்கி நோயாளிகள் சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நோயாளிகள் படுத்துறங்கும் கட்டில்கள் துருபிடித்து காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான கட்டில்களின் நடுப்பகுதி உள்வாங்கி இருப்பதால் நோயாளிகள் அச்சத்துடனே பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான கட்டில்கள் துருபிடித்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்காக வந்த பலர் கட்டில் இல்லாததால் தரையில் படுத்திருந்தனர். தஞ்சை மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக இயங்கும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டில் வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளிகளுக்கு தேவையான கட்டில்களை வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Kumbakonam Government Head Hospital ,
× RELATED கும்பகோணம் அரசு தலைமை...