இடத்திற்காக பணம் வாங்கியவர் ஓட்டம் ரூ.2.75 லட்சம் பணத்தை பறிகொடுத்த தொழிலாளிக்கு வீட்டில் ஏலன பேச்சு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த தாய் மயங்கி விழுந்தார்

தஞ்சை, பிப். 18: பணத்தை கொடுத்தும் இடத்தை வாங்கமல் ஏமாந்ததாக மகனை அவரது குடும்பத்தினர் தினமும் திட்டுவதை சகித்து கொள்ள முடியாத தாய், தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து விட்டு திரும்பியபோது மயங்கி விழுந்தார்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கலெக்டரிடம் 72 வயது மூதாட்டி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மனு அளித்து திரும்பி கூட்டரங்கத்தை விட்டு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதற்கு பிறகு எழுந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது: பாபநாசம் அடுத்த சோமேஸ்வரபுரத்தை சேர்ந்த எனது பெயர் இந்திராணி (72). எனது கணவர் சோமசுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனது ஒரே மகன் பக்கிரிசாமி (52) கூலி வேலை செய்து வருகிறான். 4 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் 57 சென்ட் இடத்தை ரூ.2.75 லட்சத்துக்கு விலை பேசி வாங்கினான். இதற்கான பணத்தை பெற்று கொண்ட சங்கர், இடத்தை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் ஊரை விட்டு சங்கர் ஓடிவிட்டார்.இதனால் பக்கிரிசாமியை அவனது மனைவி, மகன் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டாய் என தினமும் திட்டி வந்தனர். இதனால் என்னிடம் பக்கிரிசாமி சொல்லி அழுதான். இதனால் சங்கரிடமிருந்து எனது மகனுக்கு இடத்தை பதிவு செய்து தர கோரி கலெக்டரிடம் மனு அளித்தேன். நான் இங்கு வந்தது எனது மகனுக்கு தெரியாது. பக்கத்து வீட்டு பெண்ணை துணைக்கு அழைத்து வந்தேன். எனது மகன் படும் வேதனையை தாங்க முடியவில்லை. எனது இடத்தையும், எனது மகனையும் மீட்க வேண்டும் என்று கூறி அழுதார். இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

Related Stories: