×

கவிஞர் மருதகாசிக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் அரியலூர் குறைதீர் கூட்டத்தில் மனு

அரியலூர், பிப். 18: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். குறைதீர் கூட்டத்தில் தமிழ்களம் நண்பர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உழவின் பெருமையை தன் வரிகள் மூலம் உலகறிய செய்த கவிஞர் மருதகாசி, அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் ஊராட்சி மேலக்குடிக்காடு கிராமத்தில் பிறந்தவர்.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான இவர், எம்ஜிஆருக்கு புரட்சிகரமான வரிகளில் பாடல் எழுதியுள்ளார். பொதுவுடமை மற்றும் தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நிறைய கவிதை, திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 2007ம் ஆண்டு இவரது திரை இசை பாடல்கள், புத்தகங்களை அரசுடமையாக்கிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, மருதகாசியின் வாரிசுகள் 9 பேருக்கும் நிதியுதவி வழங்கினார். இவரது கவிதைகள், கதைகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்ற சிறப்புமிக்க கவிஞரின் 100வது பிறந்த நாள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி நிறைவடைந்துள்ளது. எனவே இன்றைய தலைமுறைக்கு அவரின் பெருமையை அறியவும், இவரின் புகழை சிறப்பிக்கும் வகையில் அரசு சார்பில் அரியலூர் மாவட்டத்தில் மருதகாசிக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும். மேலும் அவரது நினைவாக அவரது ஊரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Poet Maruthkasi ,ceremony ,Ariyalur ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...