×

பொதுமக்கள் மனு கிளார்க் பெயரில் பணம் எடுத்து மோசடி சாலை பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

தா.பழூர், பிப். 18: ஜெயங்கொண்டம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனூர் கிராமம் மேலத்தெருவில் (பேவர் பிளாக்) சிமென்ட் சாலை அமைக்க 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதற்கு ரூ.4.25 லட்சம் அரசு நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 100 மீட்டர் தூரம், 11 அடி அகலத்தில் சாலை அமைப்பதற்கு உண்டான தொகையை அப்பகுதி கிளர்க் பெயரில் எடுத்து விட்டு சாலை அமைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேவனூர் ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி சிவகுமார் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணம் எடுக்கப்பட்டிருந்ததும், சாலை அமைக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த பொதுமக்கள் பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து கலெக்டருக்கும், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் ஊராட்சி தலைவர் விசாலாட்சி சிவக்குமார் புகார் மனு அனுப்பியுள்ளார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது