×

அரசு விதிகளை மீறி குவாரியில் முறைகேடு கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மயிலாடுதுறை, பிப். 18: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் முடிகண்டநல்லூர் பகுதியில் கடந்த 10 தினங்களாக அரசு மணல் குவாரி அமைத்து ராதாநல்லூர் மணல் கிடங்கில் சேமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனத்தினர் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் 500 மீட்டர் தூரத்திற்கு லாரிகள் ஆற்றில் செல்ல பாதை அமைத்துள்ளனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆகாங்கே செயல்பட்டுவரும் கிணறுகளின் அருகில் இந்த மணற்குவாரி செயல்பட்டு வருகிறது. ஆற்றின் நடுப்பகுதி வரை சென்றுள்ள பாதை நடுவில் 3 பொக்லைன் இயந்திரங்கள்மூலும் மணலை அள்ளிக்குவித்து லாரிகளில் ஏற்றி விடுகின்றனர். காலை 4 மணிக்கு துவங்கும் இந்த மணற்குவாரி இரவு 7 மணிக்கு நிறுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 200 லாரிகள்முதல் 250 லாரிகள்வரை மணல் அள்ளப்படுகிறது. அனைத்தும் மணற்கிடங்கிற்கு தான் செல்கிறதா அல்லது வேறு எங்கு செல்கிறது என்ற குழப்பம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட எல்லைவரை ஆற்றின் நடுவில் சென்று மணல் குவிக்கப்படுகிறது. அதிகாரிகள் இருப்பதில்லை. எந்த கண்காணிப்பும் செய்யப்படுவதமில்லை, இதுகுறித்து முடிகண்டநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரபாகரன் மற்றும் துணைத்தலைவர் அன்பழகன் ஆகியோர் மணற்குவாரிக்குச் சென்று கேட்டபோது அங்கே எந்த அதிகாரிகளும் இல்லை. மணற்குவாரி அமைக்கப்படுவதற்கு முன்பு எப்பொழுது மணற்குவாரி இயங்க ஆரம்பித்தது, எத்தனை அடி ஆழம் மணல் அள்ளப்படுகிறது.

எத்தனை லாரிகள் இதில் இயக்கப்படுகிறது என்பதுபோன்ற விபரங்களை தெரிவிப்பது வாடிக்கை. ஆனால் தனியார் ஆக்கிரமித்து ஆற்றில் இறங்கி தங்கள் இஷ்டம் போல் செயல்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, முறையான விபரங்களை எங்களது ஊராட்சிக்குத் தெரிவிக்காமல் மணல் அள்ளக்கூடாது என்றும் 5 அடி ஆழத்திற்கும்மேல் மணல் அள்ளக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். மணல் அள்ளச்செல்லும் லாரிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆற்றில் மணலை குவிக்கும் பணி நடைபெற்றவந்ததைக் கண்ட பொதுமக்கள் ஆற்றின் உள் சென்று மணலை அள்ளக்கூடாது என்று தடுத்து விட்டனர். எந்தவித முறையும் இல்லாமல் மணல் அள்ளுவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது என்றும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி நாகை மாவட்டம் முழுமைக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் முறைப்படுத்தாமல் குவாரி இயக்கக்கூடாது என்றும் தனியார் எக்காரணத்தைக்கொண்டும் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் கேட்டுக்கொண்டனர். இதனால் நேற்று முழுவதும் மணல் அள்ள முடியாமல் லாரிகள் காத்துக்கிடந்தன.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...