×

அரசு பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் முற்றுகை போராட்டம்

தோகைமலை, பிப்.18: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை 39 மாணவர்களும், 31 மாணவிகளும் மொத்தம் 70 பேர் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கி அவர்களை உற்சாகப்படுத்தி கல்வி தரத்தில் வளர்ச்சி அடைவதற்காக ஆண்டுகள்தோறும் கல்வி சுற்றுலாவிற்காக மாணவ, மாணவிகளை அழைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கல்விசுற்றுலா செல்வதற்காக கடந்த 13ம் தேதி வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்தில் சென்றனர். இதில் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் ஜீவா, பெரியநாயகி, தமிழரசி, சுதாகர் ஆகிய 5 பேருடன் 22 மாணவர்களும், 17 மாணவிகளும் சென்று உள்ளனர்.

பின்னர் வெள்ளிக்கிழமை அன்று ஒகேனக்கல், மேட்டூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றுவிட்டு நாமக்கல் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதற்காக பஸ்சில் வந்து உள்ளனர். அப்போது 10ம் வகுப்பு பயிலும் மாணவன் அமர்ந்து உள்ள இருக்கையில் அதே வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவர் அமர்ந்து வந்ததாக தெரிகிறது. இதை பலமுறை கண்டித்து உள்ள தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அந்த மாணவனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் சுற்றுலா தளங்களில் சேட்டை செய்த மேலும் 6 மாணவர்களையும் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அடித்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி சுற்றுலா முடிந்து வந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர்.

இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர்கள், மாணவர்களும் தலைமை ஆசிரியர் ஆறுமுகத்தை கண்டித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து நேற்று முற்றுகை போராட்டம் செய்தனர். இதனால் பள்ளி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, குளித்தலை தாசில்தார் மகாமுனி, குளித்தலை இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் விமலாவேலாயுதம், விஏஓக்கல் கோவர்த்தனா, வெங்கடேசன், பிடிஏ தலைவர் கண்ணதாசன் ஆகியோர் முற்றுகை போராட்டம் செய்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்தனர்.

இதில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததால் இதுகுறித்து பெற்றோர்களிடம் மனுவாக அளிக்குமாறு தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் மனுவாக அளித்தனர். இதையடுத்து புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மேலும் மாணவ மாணவியர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : Parents ,government school headmaster ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்