×

வாழை விவசாயிகளை வாட்டிவதைக்கும் இடைத்தரகர்கள் நிரந்தர தீர்வுகாணக்கோரி கலெக்டரிடம் வலியுறுத்தல்

கரூர், பிப்.18: வாழை விவசாயிகளை வாட்டி வதைக்கும் இடைத்தரகர்களின் அடக்குமுறைக்கு தீர்வு காண வேண்டும் என்று வாழை விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர். காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜராம் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: வாழைத்தார் விற்பனையில் ஏற்பட்டு வரும் கஷ்டங்களையும், நல்ல விலைக்கு கிடைக்காமலும், வெட்டி தாருக்கு முழு பணமும் கிடைக்காமல் இருப்பதற்கு ஒரு சட்டம் இயற்ற அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக வாழை விவசாயிகளுக்கு விற்பனையில் பாதுகாப்பு இல்லை. வாழைத்தார் அழுகும் பொருள் என்பதால் உடனே விற்க வேண்டிய நிலை உள்ளது. அரசு அளிக்கும் வாழை விவசாய கடன் பற்றாத காரணத்தினால் ஏழை வாழை விவசாயிகள் தனியாரிடம் வட்டிக்கு கடன் பெற வேண்டியுள்ளது. குறிப்பாக, கடன் கொடுத்தவர்களிடம்தான் விவசாயி, வாழை தாரை விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

வாழை விவசாயிகளை வாட்டி வரும் இடைத்தரகர்களின் அடக்குமுறைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். இந்தியாவிலேயே தமிழக அரசு விவசாய வியாபாரி ஒப்பந்த விற்பனை சட்டத்தை இயற்றியுள்ளயது. இது வாழைக்கும் பொருந்தும். எனவே, வாழை விவசாயிகளிடம் வாழைத்தார் வாங்கும் இடைத்தரகர்கள் அரசு அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். வாழைத்தார் தரத்துக்கு ஏற்றபடி வாரம் ஒரு முறை கிலோ என்ன விலை என அரசு அறிவிக்க வேண்டும். நெய் பூவன் ரகத்திற்கு விலை அறிவிக்கப்படுகிறது. அதனை விவசாயிகளிடம் மறைத்து குறைந்த விலையை சொல்லி வாங்கும் இடைத்தரகர்கள் சிலர் உள்ளனர். தாரின் காம்புக்காக எடை குறைப்பதும் நடைபெறுகிறது. எனவே, வாழை விவசாயிகளை வாழ வைக்க அரசு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தைப்படுத்துதல் வாழைக்கும் வர வேண்டும். வாழை தார் விற்பனையில் பாதுகாப்பு வேண்டும். வாழை ரகத்திற்கு விலை வார வாரம் மூலம் அரசு மூலம் அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : banana farmers ,
× RELATED சபரிமலை சீசன் காரணமாக வாழை...