×

சர்வீஸ் பிளேஸ்மென்டில் சென்ற ஊழியர்கள் துறைக்கு திரும்பினர்

புதுச்சேரி, பிப். 18: கவர்னர் உத்தரவையடுத்து சர்வீஸ் பிளேஸ்மெண்டில் பணியாற்றி வந்த பொதுப்பணித்துறை ஊழியர்களில் 90 சதவீதத்தக்கு மேற்பட்டோர் மீண்டும் துறைக்கே திரும்பினர்.புதுச்சேரியில் பொதுப்பணி, உள்ளாட்சி, நலவழி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் சிலர் அரசு துறைகளில் ஊதியம் பெறுவார்கள். ஆனால் அவர்கள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களில் எவ்வித அரசாணையும் இல்லாமல் சர்வீஸ் பிளேஸ்மென்ட் (சேவை பணி) அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.இதுதொடர்பாக ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்று கவர்னர் கிரண்பேடியிடம் கடந்தாண்டு மனு அளித்தார். இதையடுத்து, துறை செயலர் உத்தரவின்றி எந்த ஊழியரையும் சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் பணிபுரிய அனுப்பக் கூடாது என அனைத்து துறை இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவரவர் பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தபோது, பொதுப்பணித்துறையில் 99 பேர் சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் மீண்டும் பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் துறைக்கு வராவிட்டால் அடுத்த மாதம் ஊதியத்தை நிறுத்த உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறையில் உள்ள குடிநீர் விநியோக பிரிவு, கழிவுநீர் பிரிவு, கட்டிடம் மற்றும் சாலைகள் உட்பட 8 பிரிவுகளில் உதவி பொறியாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, பொதுப்பணித்துறையில் உள்ள சீனியர் மெக்கானிக், டிராப்ட்மேன் தொடங்கி பல்வேறு பொறுப்பு வகித்து சர்வீஸ் பிளேஸ்மென்ட்டில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் பணிபுரிவோர் அவரவர் துறைக்கு  17ம் தேதி (நேற்று) திரும்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, நேற்று 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீண்டும் அவரவர் பணிக்கு திரும்பி உள்ளதாகவும், மீதியுள்ளவர்கள் ஓரிரு தினங்களில் பணிக்கு திரும்பி விடுவார்கள் என்றும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : service placement ,department ,
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...