புதுவையில் கிரண்பேடி மூலம் வளர்ச்சி என்பது பூஜ்யம்தான்

புதுச்சேரி, பிப். 18: கடந்த மூன்றரை ஆண்டுகளில் கவர்னர் கிரண்பேடியின் மூலம் புதுச்சேரியில் வளர்ச்சி என்பது பெரிய பூஜ்யம்தான் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான சஞ்சய் தத் கூறினார்.இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை பறிக்கும் செயலில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஈடுபட்டு வருகிறது. உத்ரகாண்ட் பாஜக அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்போது உச்சநீதிமன்றமும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையில்லை என்று கூறியுள்ளது. இது இட ஒதுக்கீட்டிற்கு எதிரான முதல் அடி. அடுத்து நாடு முழுவதும் இதனை அமல்படுத்த பாஜக முயற்சிக்கும். சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மட்டுமே இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும்.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் முதல்முறையாக புதுச்சேரியில்தான் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கும், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சுற்றுலா வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், தொழிற்சாலைகளை கொண்டுவரவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் கவர்னர் கிரண்பேடி ஒத்துழைக்காததால் அவைகள் தாமதப்படுவதாகவும், தடுக்கப்படுவதாகவும் உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் கவர்னர் கிரண்பேடியின் மூலம் புதுச்சேரியில் வளர்ச்சி என்பது பெரிய பூஜ்யம்தான்.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிக முக்கியமானது. முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவரின் விவாதம் சட்டசபையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி சட்டமன்றத்தில் எந்த விவாதத்திலும் பங்கு கொள்வதில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தபோது என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் பங்கேற்கவில்லை.அதிமுக நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கு அளிக்காமல் இருந்திருந்தால், அந்த சட்டமே அமலுக்கு வந்திருக்காது. இதனால் அந்த சட்டத்தை எதிர்த்து தற்போது நாடு முழுக்க போராட்டம் நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுகவே காரணம். என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் குடியுரிமை திருத்த சட்டத்தில் தங்களது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழாவில் மவுனத்தை கலைந்து ரங்கசாமி பேசியிருப்பது, அரசியல் காரணம் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் பேசினார்பேட்டியின்போது மாநில காங்., தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உடனிருந்தார்.

Related Stories: