செல்லியம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

ரிஷிவந்தியம், பிப். 18:  ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராம எல்லையில் செல்லியம்மன் கோயில் குளம் உள்ளது. இக்குளம் சுமார் 85 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக செடி, கொடிகள், மரங்கள் படர்ந்து வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. மேலும் குளம் என்பதே அடையாளம் காண முடியாத அளவுக்கு மண்மேடுகள் படிந்து கிடக்கின்றன. இக்குளம் திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி பிரதான சாலையையொட்டி ரிஷிவந்தியம் அருகில் உள்ளதால் இப்பகுதியில் உள்ள ஒரு சில நபர்கள் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகளை கட்டி வருகின்றனர். இக்குளம் ஆக்கிரமிப்பால் குளத்துக்கு வரும் மழைநீரை சேமிக்க வழியில்லாமல் தற்போது வறண்டு காணப்படுகிறது.

Advertising
Advertising

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையானது குறைந்த அளவிலேயே பொழிந்துள்ளதால் நீர்நிலைகள், குளங்களில் தண்ணீர் இல்லாமல் தற்போது அவைகள் அனைத்தும் வறண்டுபோய் உள்ளன. தற்போது வெயில் காலம் துவங்கியுள்ளதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இக்கிராம மக்கள், இக்குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் சேகரிக்கும் அளவுக்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: