×

சேதமடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு, பிப். 18: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை கிராம சாலை விருத்தாசலம் சாலையிலிருந்து இணைப்பு சாலையாக செல்கின்றது. இந்த சாலையானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலையாகும். தற்போது ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கத்தாழை ஊராட்சியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும், 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளது. கத்தாழை, கரைமேடு, மும்முடி சோழகன், கரி வெட்டி, ஆகிய நான்கு கிராம பொது மக்களும் விருத்தாசலம் மெயின் ரோட்டில் பேருந்தை விட்டு இறங்கி 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை கடந்து நடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

மேலும் டவுன் பஸ் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தான் சென்று வருகின்றது. இரு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் மட்டும் வெளியூர் செல்பவர்கள் எந்நேரங்களிலும் சென்று வந்து விடுவர். வாகன வசதி இல்லாத நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கத்தாழை ஊராட்சி புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தின் முதல் ஊராட்சியாகும். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டும் பல கிராம ஊராட்சிகளில் உள்ள குறைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே 4 கிராம விவசாயிகளும் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கும் நெல், உளுந்து போன்ற பொருட்களையும், உணவு தானியங்களையும், விற்பனை செய்ய வெளிமார்க்கெட்டுகளுக்கும், நகர பகுதிகளுக்கும் கொண்டு செல்ல மோசமாக உள்ள இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள கத்தாழை கிராம சாலையை நேரடியாக ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...