×

கடலூர் நகராட்சி பகுதியில் பரபரப்பு கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்

கடலூர், பிப். 18: கடலூர் நகராட்சி பகுதியில் கழிவுநீர் கலந்து குடிநீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து இதுபோன்று அடிக்கடி ஏற்படும் நிலையில் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளன.கடலூர் நகராட்சி 45 வார்டு பகுதியை கொண்டது. திருப்பாதிரிப்புலியூர், மஞ்சகுப்பம், புதுநகர் என மூன்று முக்கிய பகுதிகள் கொண்டுள்ள கடலூர் நகராட்சியில் கேப்பர் மலைப்பகுதியில் இருந்து அடிப்படை தேவையான குடிநீர் போர்வெல் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தற்போது குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழமைவாய்ந்த குடிநீர் வினியோக பைப்புகள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீரும் கலந்து பொதுமக்களுக்கு பயனற்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் போடி தெரு,  தேரடி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கம் போல் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி தரப்பினரிடம் தெரிவித்தபோது சுத்திகரிப்பு பணி நடைபெறுவதாகவும் அதனால் குடிநீர் சிறிது நேரம் கலங்கலாக வரும் எனவும் பின்னர் சீராக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் குடிநீர் தூய்மையாக இல்லாமல் தொடர்ந்து கழிவுநீருடன் வருவதால் பொதுமக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை வேளைகளில் அலுவலகம், பள்ளி என பல்வேறு வகை பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள் தங்களது அன்றாட பணியை மேற்கொள்ள உள்ள நிலையில் இதுபோன்று கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகம் சப்ளை செய்யப்படுவதால் பயனற்ற நிலையை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய செய்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். நேற்று திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வழக்கம்போல் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் மீண்டும் அதை கால்வாயில் ஊற்றினர். மேலும் அடிப்படை தேவையாக உள்ள குடி நீரை பெறுவதற்கு கட்டணம் செலுத்தி குடிநீர் விநியோக லாரிகள் மூலம் பெற்றுள்ளனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் பகுதி மக்கள் கூறுகையில்: கழிவுநீர் கலந்து குடிநீர்  வருவது குறித்து நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அடிக்கடி இதுபோன்று ஏற்படுவதால் அடிப்படை தேவையான குடிநீருக்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு ஏற்படாமல் உள்ளதால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றனர்.

நோய் தாக்கம் பெருகி வரும் நிலையில் இதுபோன்று சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வினியோகம் நடைபெறுவதால் கடலூர் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தொடர்பாக நகராட்சி தரப்பில் கேட்டபோது, ஏற்கனவே பழைய பைப்லைன் மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்தின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உடைப்பு ஏற்பட்டு பிரச்னை இருந்தது. தற்போது அது சீரமைக்கப்பட்டு உள்ளது . புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழி காணப்படும் என்றனர்.

Tags : municipality ,Cuddalore ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை