×

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்காததால் ஊராட்சி நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது

நெய்வேலி, பிப். 18:  குறிஞ்சிப்பாடி ஊராட்சிகளில் புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் முழுமையாக ஒப்படைக்கப்படாத காரணத்தால் ஊராட்சி நிர்வாகங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் முடிந்து புதிய தலைவர்கள் ஜனவரி 6ம் தேதி பொறுப்பேற்றனர். துணை தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பொறுப்பேற்று கொண்ட தலைவர்களிடம் இதுவரை நிர்வகித்து வந்த வங்கி வரவு, செலவு கணக்குகள், அதற்கான செக் புக்குகளை முழுமையாக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில ஊராட்சி செயலாளர்கள் குடிநீர், தெருவிளக்கு, பராமரிப்பு செலவுக்காக கணக்குகள், அதற்குரிய செக் புக் மட்டுமே ஊராட்சி தலைவரிடம் ஒப்படைத்து இருப்பதாக தெரிகிறது.  நிதி பயன்பாடு, திட்ட கணக்குகளுக்கான செக் புக் இன்னும் ஒப்படைக்கவில்லை. மேலும் இதுகுறித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரமும் இன்னும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால் தலைவர் பொறுப்பேற்று இன்னும் செயல்பட முடியாத நிலையில் தலைவர்கள் இருப்பதாக புலம்பி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுகையில் தேர்தல் முடிந்து பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் ஊராட்சி செயலாளர்கள் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்காமல் உள்ளனர். அதிக நிதி இருக்கக்கூடிய பொது நிதி கணக்கு ஒப்படைக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகையால் உடனடியாக அனைத்து வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி செயலாளர்கள் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags : panic ,Kurinjipadi Union ,
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...