×

குடியிருப்பு பகுதியில் சாயக்கழிவு நீர்

திருப்பூர்,பிப்.18:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். வஞ்சிபுரம் பிரிவு பொதுமக்கள்:எங்கள் பகுதியில் பனியன் துணிகளுக்கு லேபிள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், பாதுகாப்பற்ற நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள காலியிடத்தில் குழி வெட்டி அதில் தேக்கி உள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: காங்கயம் வட்டம் வட்டமலை கிராமத்தில் தனியார் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கழிவுநீரை ஆலைக்குள் அதன் நிர்வாகம் இறக்குவதால், அவிநாசிபாளையம்புதூர், வட்டமலை, சேடங்காளிபாளையம், கொழந்தான்வலசு, பாப்பிரெட்டிபாளையம் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக  மாசுபட்டுள்ளது.
இதனால் நிலத்தடி நீர்மட்டத்தை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர், தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கலெக்டர் தக்க விசாரணை மேற்கொண்டு, தனியார் கார்பன் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.  

ஆட்டோ ஓட்டுனர்கள்:திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த தொகை 50 ஷேர் ஆட்டோ. இதில் குறிப்பாக தாராபுரம் பகுதியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செட்டிபாளையம் வரை 32 ஷேர் ஆட்டோக்கள் வரை செயல்படுகிறது. அரசு நிர்ணயம் செய்த 5+1 இருக்கையில் கொண்ட வாகனத்தில் அத்துமீறி 35 முதல் 40 பயணிகள் வரை ஏற்றிக்கொண்டு விபத்து ஏற்படும் விதமாக செல்கிறார்கள். எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை:கேஸ் சிலிண்டர் முகவர்கள், அதில் வேலை செய்யும் சிலிண்டரை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர மறுக்கின்றன. ஒரு சிலிண்டருக்கு ரூ.46 கூலியை பல முகவர்கள் வழங்காததால், நுகர்வோர் பணம் கொடுத்து பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தர மறுக்கும் சமையல் எரிவாயு உருளை முகவர்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும்.

காளிபாளையம் கட்டிடத் தொழிலாளி சரஸ்வதி (55):எனக்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். பிப்ரவரி 1ம் தேதி பெரியாண்டிபாளையத்தில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது கலவை இயந்திரத்தில் எனது வலதுகை சிக்கி, முழுவதும் சிதைந்தது.என்னால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் தவிக்கிறேன். எனது பிள்ளைகளும் கூலி வேலைக்கு செல்வதால் போதிய வருமானம் இல்லை. நானும் ஏற்கனவே கூலி வேலை செய்து, ஜீவனம் நடத்திவந்த நிலையில், தற்போது பெரும் சிரமத்தை சந்தித்துள்ளேன். ரூ. 2லட்சம் கடன் பெற்று, மருத்துவச் செலவு செய்துள்ளேன். ஆகவே முதல்வர் நிவாரண நிதியில் இருந்து எனக்கு உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும்.  

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை:திருப்பூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. தாராபுரம் சூரியநல்லூர் ஊராட்சி வேங்கிபாளையத்தில் சாலை பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால் பஸ் நிறுத்தம் பகுதியில் முடியவில்லை. சாலையில் இருந்து பேருந்தில் மேற்கு புரம்  இறங்கி கிழக்கு புரம் நோக்கி நடந்து வர வேண்டுமென்றால், அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டி உள்ளது. மேலும் சாலையின் மையத்தடுப்பை தாண்டித்தான் சாலையை கடக்க வேண்டி உள்ளது. வழி இல்லாததால், மரவபாளையம், பீலிக்காம்பட்டி, வேங்கிபாளையம், தாயம்பாளையம் என ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேங்கிபாளையத்துக்கு வழி ஏற்படுத்துவதுடன், நிழற்குடையும் அமைத்தும் தர வேண்டும்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...