×

நிஜ போலீசை பார்த்து ஓட்டம் பிடித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி

திருப்பூர்,பிப்.18: திருப்பூரில் போலி சப்-இன்ஸ்பெக்டர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது திடீரென வந்த நிஜ போலீசை பார்த்து தப்பி ஓடினார். அப்போது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம், அனுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் (23). இவர் சின்னக்கரையிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் ரோட்டில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் போல சீரூடை அணிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து கொண்டிருந்துள்ளார்.

சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை பார்த்த அஜீத்குமார் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வேகமாக புறப்பட்டார். அதிவேகமாக சென்ற அவர் நிலை தடுமாறி முன்னால் வந்த வேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்த பல்லடம் டி.எஸ்பி. முருகவேல் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். இந்த சம்பவ குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: அஜீத்குமார் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் அவருடையதுதானா? அல்லது திருட்டு வாகனமா? என விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் பல்லடம் ரோடு வீரபாண்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றதாக புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் ஏற்பட்ட சந்தேகத்தில் அஜீத்குமார் ஓட்டி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : sub-inspector ,crash ,
× RELATED தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது