×

மாநகரில் நாளுக்கு நாள்அதிகரிக்கும் வீட்டு வாடகை

திருப்பூர், பிப்.18: திருப்பூரில், வீட்டு வாடகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.  தொழில் நகரமான திருப்பூரில், வெளியூர் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். வேலைதேடி, திருப்பூர் வரும் இவர்களுக்கு, வேலையை காட்டிலும், பெரிய பிரச்னையாக இருப்பது, வாடகை வீடுகள். காரணம், நியாயமான வாடகைக்கு வீடுகள் கிடைப்பது, திருப்பூரில் குதிரை கொம்பாகி வருகிறது. வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறையுடன், இரண்டு அறைகளை கொண்ட வீட்டுக்கு வாடகை, ஐந்து ஆயிரம் ரூபாய் என்கிறார்கள். குறைந்தது, 10 மாத  வாடகை தொகையை, அட்வான்சாக வாங்கிக் கொள்கின்றனர். இதுதவிர, புரோக்கர் கமிஷன் கொடுத்தாக வேண்டும். இத்தகைய வீடுகளில், அடிப்படை வசதிகள் சரிவர இருக்காது. தண்ணீர், சுற்றுச்சுவர் போன்ற வசதிகள்கூட பெயரளவுக்கே இருக்கும். ஒரே காம்பவுண்டில் உள்ள லைன் வீடுகள் என்றால், முறைவாசல், தண்ணீருக்கான பொது மோட்டாருக்குரிய மின் கட்டணம், பராமரிப்பு செலவு என கூடுதலாக தொகையை ‘கறக்கும்’ வீட்டு உரிமையாளர்களும் உண்டு. வசதி படைத்த வீடு அல்லது அப்பார்ட்மென்ட் என்றால், மாத வாடகை 10 ஆயிரம் ரூபாயை தொடும். தவிர, சுவற்றில் ஆணி அடிக்கக்கூடாது என்பதில் தொடங்கி, விருந்தினர்கள் வந்தால், வீட்டில் தங்க வைக்கக் கூடாது என்பது வரை, பல்வேறு நிபந்தனைகளை, வீட்டு உரிமையாளர்கள் விதிக்கின்றனர்.

திருப்பூர் நகர் பகுதியில் எகிறும் வாடகைகளால், புறநகர் பகுதிக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள், அவிநாசி, சேவூர், மங்கலம், பொங்கலூர் என புறநகரில் வீடு பார்த்து, குடியேறுகின்றனர். புறநகர் பகுதிகளில், வாடகைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது, அங்கும் வீட்டு வாடகை உயரத் துவங்கியுள்ளது. இது குறித்து பனியன் கம்பெனி தொழிலாளி ஒருவர் கூறுகையில், குடும்பத்துடன் தங்குவதற்கு, சுமாரான வீடு பார்த்தாலே, வாடகை 4 ஆயிரத்திற்கு குறையாமல் கிடைப்பதில்லை. தண்ணீர் உள்ளிட்ட பிற வசதிகள், போதியளவில் இருக்காது. வாடகையை, ஆண்டுக்கு ஒருமுறை, 500 ரூபாயாவது உயர்த்தி விடுகிறார்கள். இது பற்றி கேட்டால், ‘வீட்டை காலி செய்துகொள்’ என்ற பதிலே வருகிறது. உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையை, வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது. ஆகவே தொழிலாளர்களுக்கு என்று தனியாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : city ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு