×

பனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள் கருகின

ஊட்டி,பிப்.18: நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி நான்கு மாதங்களுக்கு மேல் பனி கொட்டி வருகிறது. இம்முறை துவக்கத்தில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்ட போதிலும், பின் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை பனி பொழிவு சற்று குறைந்தே காணப்பட்டது. வழக்கம் போல் நீலகிரி மாவட்டத்தில் குளிர் வாட்டியெடுத்தது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பல நாட்கள் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றது. பனியின் தாக்கம் நான்கு மாதமும் நீடித்த நிலையில், பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் கருகின. இதனால் தேயிலை தொழில் பாதிக்கப்பட்டது.

அதே போல், சில பகுதிகளில் காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. ஊட்டி அருகேயுள்ள பிக்கட்டி, லாரன்ஸ், எடக்காடு போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் பல தேயிலை தோட்டங்கள் உறைப்பனியால் கருகியுள்ளன. தொடர்ந்து பனிப்பொழிவு நீடிக்கும் நிலையில், குளிர் குறைந்தபாடில்லை. தற்போது உறைப்பனி பொழிவு குறைந்து காணப்பட்ட போதிலும் நீர் பனியின் தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கிறது. இதனால், அதிகாலை நேரங்களில் தொடர்ந்து குளிரின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அதேசமயம், பகலில் வெயில் வாட்டியெடுக்கிறது.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...