குடிநீர் வழங்க கோரி அன்னூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அன்னூர், பிப். 18:  அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காரேகவுண்டம்பாளையம் ஊராட்சியில், உள்ள அச்சம்பாளையம், திருவள்ளுவர் நகரில் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஆற்று குடிநீர் வழங்க கோரி கடந்த 15 ஆண்டுகளாக பொது மக்கள் போராடி வருகின்றனர். ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், எம்.எல்.ஏ அலுவலகம் என பல இடங்களில் 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அன்னூர் ஒன்றிய அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

 மேலும் போராட்டத்தில் ஈடுபட வந்த கிராம மக்களை தடுத்து நிறுத்தி, சிலரை மட்டும் ஒன்றிய அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். உள்ளே சென்ற கிராம மக்களின் பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, பி.டி.ஓ விஜயராணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன், ஊராட்சி தலைவர் தங்கராஜ் துணைத் தலைவர் குருமூர்த்தி, ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, திருவள்ளுவர் நகருக்கு, குடிநீர் சப்ளை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, ஒரு வாரத்தில் எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள், முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: