×

தலைமை தபால் நிலையத்தில் டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பார்சல்

கோவை, பிப். 18:  கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பார்சலை டெலிவரி செய்ய முடியாமல் தபால் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். தபால் துறையில் பார்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அரை கிலோ முதல் 15 கிலோ வரையிலான பொருட்களை உரிய பணம் செலுத்தி பார்சலாக அனுப்பும் வசதி இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் பார்சல்கள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நேரடியாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு வரும் பார்சல்கள் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம், கூட்செட் ரோடு தலைமை தபால் நிலையம், அண்ணாசிலை தபால் நிலையம், கே.கே.புதூர் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும். பின்னர், சம்மந்தப்பட்ட இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். இதற்காக, தனி தபால் ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் பார்சல்களுக்கு நோடல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்டத்திற்கு வரும் அனைத்து பார்சல்களும் கூட்செட் ரோடு தபால் நிலையத்தில் கொண்டு வந்து குவிக்க வைக்கப்படுகிறது.  தினமும், 500க்கும் மேற்பட்ட பார்சல்கள் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறது. இந்த பார்சல்களை சம்மந்தப்பட்ட ஊர்களுக்கு கொண்டு சென்று டெலிவரி செய்ய 4 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பார்சல்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடிவதில்லை. மேலும், பார்சல் பொருட்களை வைக்க இடப்பற்றாக்குறை தலைமை தபால் அலுவலகத்தில் இருக்கிறது. இதனால், அலுவலர்கள் பணியாற்றும் இடங்களில் பார்சல் மூட்டைகள், பெட்டிகளை டன் கணக்கில் குவித்து வைத்துள்ளனர். பார்சல் டெலிவரி செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் மத்திய, மாநில அரசு அலுவலகத்திற்கான பார்சல்கள், தனியார் கம்பெனி, அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளின் பார்சல் தபால்கள், வேளாண் பல்கலைக்கழகத்தின் பார்சல்கள், பென்ஷன் தொடர்பான பைல்கள் டெலிவரி செய்யாமல் முடங்கியுள்ளது.

பார்சல்களை கொண்டு சென்று டெலிவரி செய்ய  முடியாமல் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், குறிப்பிட்ட தேதியில் பார்சல்கள் கிடைக்காமல் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தபால் ஊழியர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பயனில்லை. இது குறித்து தபால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ‘பார்சல் ஹாப்’ பகுதிக்கு இந்த பார்சல்களை கொண்டு செல்ல வேண்டும். தபால் அலுவலகத்தை குப்பை போல் இருப்பதை சரிசெய்ய வேண்டும். பார்சல்களை உரிய நேரத்தில் அளிக்கும் வகையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்” என்றனர்.

Tags : post office ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு