×

மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் தாமதம்

கோவை, பிப்.18:  கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் துவங்கி 3 ஆண்டு கடந்த நிலையில் ஒரு வீட்டிற்கு கூட குடிநீர் இணைப்பு தர முடியாத அவல நிலையிருக்கிறது. கோவை மாநகராட்சியில் 2.9 லட்சம் குடிநீர் இணைப்பு உள்ளது. 12 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் குடிநீர் தேவை அதிகமாகி விட்டது. நகர் முழுவதும் தடையின்றி குடிநீர் வழக்கும் நோக்கத்தில், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டது. குடிநீர் இணைப்பு வழங்கி வாட்டர் மீட்டர் பொருத்தி இணைப்பு கொடுத்தால் 24 மணி நேரமும் குடிநீர் பெறலாம். எவ்வளவு பயன்படுத்துகிறோமோ, மீட்டர் ரீடிங் பார்த்து அதற்குரிய கட்டணம் செலுத்தினால் போதும். 24*7 என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் துவங்கி 3 ஆண்டு கடந்து விட்டது. சில இடங்களில் குழி தோண்டி பகிர்மான குழாய் பதிக்கப்பட்டது.

குறிப்பாக ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, பெரியசாமி ரோடு, டி.பி ரோடு, திருவேங்கடசாமி ரோடு என 15க்கும் மேற்பட்ட வீதிகளில் 35 கி.மீ. தூரம் குழாய் பதிக்கப்பட்டது. சிறுவாணி, பில்லூர் பிரதான குழாய்களை மாற்றும் திட்டம் பரிசீலனை நிலையில் இருக்கிறது.
நகரில் 32 இடங்களில் நீர்த்தேக்க தொட்டி கட்ட திட்டமிடப்பட்டது.  கடந்த 3 ஆண்டாக இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி கூட இறுதி செய்யப்படவில்லை. நகரில் தற்போது பாரதி பார்க், காந்திபார்க், ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம், கணபதி உட்பட 43 இடங்களில் 49 நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நீர் தொட்டிகளின் மூலமாக 4.78 கோடி லிட்டர் குடிநீர் தேக்கி வைத்து சப்ளை செய்ய முடியும். நகரில் சிறுவாணி திட்டத்தில் 9.2 கோடி லிட்டர் குடிநீரும், பில்லூர் முதல் மற்றும் இரண்டாவது திட்டத்தில் 13 கோடி லிட்டர் குடிநீரும், பவானி, ஆழியாறு, பேரூர், வடவள்ளி குடிநீர் திட்டத்தில் 3 கோடி லிட்டர் குடிநீரும் பெறப்படுகிறது.

அணை, ஆறுகளில் இருந்து குடிநீர் பெறுவது அதிகமாக இருந்தும் தேக்கி வைத்து முறையாக சப்ளை செய்ய போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பணிகள் செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய தொகை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை குழாய் பதிப்பு பணிக்காக சுமார் 27 கோடி ரூபாய் வழங்கவில்லை. இதேபோல் பராமரிப்பு, செயலாக்க பணிகளுக்காக ஒதுக்கவேண்டிய தொகையும் மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் கிடப்பில் போட்டு விட்டது. மாநகராட்சி நிதி ஒதுக்காத நிலையில், 100 வார்டுகளிலும் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் முடங்கி விட்டது. செல்வபுரம், பொன்னையராஜபுரம் வட்டாரத்தில் 12 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே குழாய் பதிப்பு பணிகள் நடக்கிறது. 24 மணி நேர குடிநீர் திட்டம் நகர்ப்பகுதியில் சாத்தியமாகுமா? என்ற சந்தேகமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் ஷரவன்குமார் கூறுகையில், ‘‘24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறோம். பணிகளை மேற்பார்வை செய்து வருகிறோம்.

விரைவில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்படும். குறிப்பாக ஆர்.எஸ்.புரத்தில் பணிகள் முடிந்த பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டில் குழாய் பதிப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்த பின்னர் அந்த பகுதியில் குழாய் பதிப்பு பணி நடத்தப்படும்’’ என்றார்.

Tags : Corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு