×

இலவச மின்சாரத்தில் டாஸ்மாக் பார் அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.3.54 லட்சம் அபராதம்

ஈரோடு, பிப். 18: ஈரோடு  அருகே இலவச மின்சாரத்தை டாஸ்மாக் பாருக்கு பயன்படுத்தியது தொடர்பாக அ.தி.மு.க.  பிரமுகருக்கு ரூ.3.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு அருகே  மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி(எ)துளசிமணி (50). விவசாயி.  அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கு சொந்தமான இடத்தில் மேட்டுக்கடையில்  இருந்து  கதிரம்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை  செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையுடன் கூடிய பார் இயங்கி வருகிறது.  இந்த பாரை அசோக் என்பவர் ஏலம் எடுத்து தற்போது முருகேஷ் என்பவர் நடத்தி  வருகிறார். மூர்த்தி விவசாயி என்பதால் இவருக்கு அரசின் சார்பில்  விவசாயத்திற்கான இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைக்கு புதியதாக மின்  இணைப்பு பெறப்பட்டுள்ளது.

ஆனால் டாஸ்மாக் கடைக்கு விவசாயத்திற்காக  வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை டாஸ்மாக் பாருக்கு பயன்படுத்தியுள்ளார்.  டாஸ்மாக் பாரில் உள்ள மின் விளக்குகள், பேன், தண்ணீர் எடுக்க தொடர்ந்து  பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் மின் மோட்டார் அமைத்து போர்வெல்  மூலமாக அந்த பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு லாரிகள் மூலமாக விற்பனை செய்து  வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார்  சென்றது. இதைத்தொடர்ந்து நேற்று மின் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட  இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயத்திற்காக  மூர்த்திக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை சட்ட விரோதமாக டாஸ்மாக்  பாருக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. மேலும் இலவச மின்சாரத்தை  பயன்படுத்தி போர்வெல் மூலமாக தண்ணீர் விற்பனை செய்யப்பட்டதும் தெரிய  வந்தது.

இதையடுத்து இதுவரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது? என்பது  குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்தனர். பின்னர் மூர்த்திக்கு 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை மூர்த்தி  செலுத்தியதால் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. இலவச மின்சாரத்தை  டாஸ்மாக் பாருக்கு பயன்படுத்தி வந்ததை தொடர்ந்து இலவச மின்சாரம் ரத்து  செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Task Force ,
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...