ஐயா காரை நிறுத்துங்க.... கால் ஊனமுற்றவரின் அலறலால் கலெக்டர் அதிர்ச்சி

ஈரோடு, பிப். 18: கலெக்டர் ஐயா காரை நிறுத்துங்க.... என்று விபத்தில் கால் ஊனமுற்றவர் கோரிக்கையை அளிக்க அலறியதால் கலெக்டர் கதிரவன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரை விட்டு இறங்கிய கலெக்டர் கதிரவன் அவரிடம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் கதிரவன் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக காரில் கிளம்ப வெளியே வந்தார். பின்னர் காரில் ஏறி கார் புறப்பட்ட நிலையில், அங்கு தடுமாறியபடி கலெக்டர் ஐயா காரை நிறுத்துங்க என்ற அலறல் சத்தம் கேட்டது. இதனால் கலெக்டரின் கார் டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட கலெக்டர் கதிரவன் காரை விட்டு இறங்கினார். பின்னர் காரை நிறுத்தும்படி கத்திய நபரின் அருகில் சென்று விசாரித்தார். அந்த நபர் கால் உடைந்த நிலையில் தனது சொத்துகளை மகள் ஏமாற்றி விட்டதாகவும், இதனால் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிப்பதாகவும் கூறினார். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார். மேலும் அங்கிருந்த போலீசாரை அழைத்து உடனடியாக இவரின் புகாரை கவனித்து நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். பின்னர் போலீசார் அந்த நபரை அழைத்து சென்று விசாரித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், பெருந்துறை பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் என தெரியவந்தது. அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் ஒரு மகளை குடும்பத்துடன் அழைத்துள்ளார். ராஜூ பணம், நகை, சொத்துகள் என சேர்த்து வைத்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் விபத்தில் கால் உடைந்தது. இதை பயன்படுத்தி இவரது மகள் நகை, சொத்து ஆவணம், பணம், வங்கி பாஸ் புத்தகம், செக், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த எலக்ட்ரீசியன் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: