நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குசாவடிகள் 24ம் தேதி இறுதி செய்யப்படும்

ஈரோடு, பிப். 18: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குசாவடிகள் விவரம் வருகின்ற 24ம் தேதி இறுதி செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வாக்குசாவடிகள் அமைப்பது தொடர்பான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் எண்ணிக்கையின் படி வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பின் படி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குசாவடிகளை அமைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் அதிகபட்சம் 1300 வாக்காளர்களுக்கு மேல் இருக்காத வகையில் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து உரிய ஆய்வு செய்து சாத்தியம் உள்ள இடங்களில் வாக்குசாவடிகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 24ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், அதன் பிறகு வாக்குசாவடி அமைவிடம், வார்டு, வீதி, வாக்காளர் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையம் ஆகியோர்க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: