×

போராட்டம் நடத்த முடிவு திருவாரூர் அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்

திருவாரூர், பிப்.18: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்களிடம் லஞ்சம் தலை விரித்தாடுவதால் அதனை தடுக்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டது.திருவாரூர் கலெக்டர் பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் லஞ்சம் பெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வி.சி.கட்சி சார்பில் டீன் முத்துக்குமரனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நோயாளிகளை உள்ளே பார்க்க செல்வதற்கு மற்றும் எமர்ஜென்சி வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு நோயாளிகள் அழைத்துச் செல்லப்படும்போது மற்றும் ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றிற்கு அழைத்துச் செல்லும் போதும், கட்டு கட்டுவதற்கும், பிரசவ வார்டிலும் தொடர்ந்து ஊழியர்கள் லஞ்சம் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.லஞ்சம் கொடுக்காத நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சில நேரங்களில் மிரட்டப் படுவதும் வாடிக்கையாக உள்ளது. மொத்தத்தில் இது அரசு மருத்துவமனையா? அல்லது தனியார் மருத்துவமனையா? என்ற கேள்வி இருந்து வருவதால் லஞ்சம் பெறும் முறையினை தடுக்க வேண்டும்.லஞ்சம் பெறுவதை தடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட பின் டீன் முத்துக்குமரன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur Government Hospital ,
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...