×

திருத்துறைப்பூண்டி 11வது வார்டில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர 11வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது .11வது வார்டு நாடார் தெரு, மீனாட்சி வாய்க்கால் கீழத் தெரு, காட்டு நாயக்கன் தெரு என 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மாத காலமாக தண்ணீர் சரிவர வராமல் சொட்டு சொட்டாக வர ஆரம்பித்துள்ளது. ஒரு குடம் தண்ணீர் எடுக்க சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இங்குள்ள பைப்புகள் தரைமட்டத்தில் இருந்து மூன்று அடி ஆழத்தில் உள்ளது. இதனால் குழிக்குள் இறங்கி பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது.எனவே உடனே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ரகுராமன் கூறி கையில்,திருத்துறைப்பூண்டி நகர 11 வது வார்டில் நீண்ட நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பைப் லைன்கள் அனைத்தும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவை முற்றிலும் பழுதடைந்து விட்டது. இவற்றை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் பொது குழாய்களை அதிகப்படுத்த வேண்டும். குடிநீர் கட்டணத்தை சரியாக வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் அதற்கான சேவையை வழங்காமல் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்கை கடைபிடிக்கிறது.ஏற்கனவே போர் மூலம் இயங்கி வந்த கை பம்புகள் செயலிழந்து உள்ளன அவற்றை புதுப்பித்து தெருவிற்கு இரண்டு கை பம்புகளை போர்க்கால அடிப்படையில் உடனே அமைத்திடவேண்டும். கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு சரிசெய்திட வேண்டும். இந்த நிலை தொடரும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி காலி குடங்களுடன் நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.


Tags : ward ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி