×

கலெக்டரிடம் பரபரப்பு புகார் வங்கி கடன், இலவச இயந்திரம் வழங்க கோரி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.18: வங்கிக்கடன் மற்றும் இலவச இயந்திரம் வழங்கக்கோரி திருவாரூரில் நேற்று தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தையல் தொழிலாளர்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்க வேண்டும், வங்கிகடன் மற்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், வீடு சார்ந்து தொழில் செய்து வரும் தையல் கலைஞர்களுக்கு வணிக ரீதியான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், நலவாரிய செயல்பாடுகளை எளிமைப்படுத்தி பணப் பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும், தையல் கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சிஐடியூ தொழிற்சங்கம் சார்புடைய தையல் தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மாவட்ட துணைத் தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சுந்தரம், மாவட்ட செயலாளர் மாலதி மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மயக்க மடந்த மாநிலத் தலைவர் :
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு துவங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகம் முன் வெயில் அதிகமாக இருந்ததால் அங்குள்ள மரத்தின் நிழலில் ஆர்ப்பாட்டம் நடத்த தையல் கலைஞர்கள் முற்பட்டனர். ஆனால் தாங்கள் அனுமதித்திருக்கும் இடத்தில் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். அதன்படி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கேட் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது 11.45 மணி அளவில் மாநில தலைவர் சுந்தரம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை உடனே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Sewing workers ,collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...