இலவச மின் இணைப்பு பெற 10 ஆண்டுகளாக காத்திருக்கிறோம் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

பேரணாம்பட்டு, பிப்.18: இலவச மின் இணைப்பு பெற 10 ஆண்டுகளாக காத்திருப்பதாக குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பேரணாம்பட்டில் தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் முருகன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் வடிவேல் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் அட்டை பெருவதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் அல்லாத நபர்கள் கிசான் அட்டையை பெறுகின்றனர். இதனால், தகுதியான விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை.மசிகம், மதினாப்பல்லி பாலாற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எனவே மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலமாக ஊராட்சிக்கு நூறு பேர் என சேர்த்து விவசாயிகள் குழுவில் தகுதியான விவசாயிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.இதனால், விவசாயிகளுக்கு வரவேண்டிய நலத்திட்ட உதவிகளான டிராக்டர், விவசாய கருவிகள், மானியம், உள்ளிட்டவை கிடைப்பதில்லை. இதில் அரசியல் நிர்வாகிகள் தலையிட்டு தங்களின் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர்.தற்போது, கோடைகாலம் தொடங்கி உள்ளதால் கால்நடைகளுக்கு வியாதிகள் வந்த வண்ணம் உள்ளது. இவற்றை தடுக்க தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். இலவச மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கு 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

மேலும், மின் இணைப்பிற்காக பணம் தருபவர்களுக்கு மட்டும் உடனடியாக இலவச மின் இணைப்பு தருகின்றனர். இதில், 4 ஆண்டுகளுக்கு மேலாக இலவச மின் இணைப்பு வேண்டி காத்திருக்கும் பயனாளிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும்.ஆத்மா திட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர்கள் தான் நிலையான உறுப்பினர்களாக தற்போது வரை உள்ளனர். அவ்வாறு உள்ளவர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறது. எனவே, புதிதாக உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போதுள்ள உறுப்பினர்கள் ஆத்மா திட்டத்தின் மூலம் அண்டை மாநிலங்களுக்கு சென்று புதிய விவசாய திட்டத்தை அறிந்து வந்தாலும் அதை நடைமுறை படுத்துவதில்லை.

Related Stories: