×

குமரியில் சம்பள உயர்வு வழங்க கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

நாகர்கோவில், பிப்.18: சம்பள உயர்வு வழங்க கோரி, குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் பால் வடிக்கும் பணி, தொழிற்கூடம் உள்ளிட்டவற்றில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த 1.12.2016 முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற்காக 47 முறை பேச்சுவார்த்தை நடந்தும், தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது. 2016ம் ஆண்டு சம்பள உயர்வு ஒப்பந்தமே முடிவடையாத நிலையில், 2019 ல் சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதுவும் இல்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இந்த கோரிக்கை கண்டு கொள்ளப்பட வில்லை. எனவே பிப்ரவரி 17ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்து இருந்தன. அதன்படி நேற்று (17ம் தேதி) காலை வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் பால் வெட்டுதல், தொழிற்கூட பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கின. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து ரப்பர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,   47 முறை பேச்சு வார்த்தை நடந்தும் பலன் இல்லாததால், வேலை நிறுத்தம் செய்ய  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இந்தமுறை மிக அதிகளவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாகர்கோவிலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், ரப்பர் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பிரச்சினையை தீர்ப்போம் என வனத்துறை அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் அவர் உறுதி அளித்தப்படி நடந்து கொள்ளவில்லை. எங்களை ஏமாற்றி விட்டார் என்றனர்.  இதற்கிடையே இன்று (18ம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.
ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு

Tags : strike ,rubber plantation workers ,Kumari ,pay rise ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து