×

கூடுவாஞ்சேரியில் மீண்டும் திறக்கப்பட்ட உழவர் சந்தை

கூடுவாஞ்சேரி, பிப். 18: ‘தினகரன் செய்தி எதிரொலியால் கூடுவாஞ்சேரியில் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் உழவர் சந்தை உள்ளது. பல்வேறு ஊர்களில்  உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை  கூடுவாஞ்சேரியில் உள்ள உழவர் சந்தையில் கொண்டு வந்து, குறைந்த விலையில் விற்கப்பட்டன.கடந்த சில ஆண்டுகளாக, மேற்கண்ட உழவர் சந்தை சரிவர திறக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில், படத்துடன் வெளியானது. இதையடுத்து, உழவர் சந்தையை வேளாண் துறை அலுவலர் வேதகிரி (பொறுப்பு), உதவி வேளாண் துணை அலுவலர் பரணிதரன் ஆகியோர் நேற்று உழவர் சந்தைக்கு வந்து ஆய்வு செய்தனர்.  அப்போது  உழவர் சந்தையில் உள்ள அலுவலரை அழைத்து விசாரித்தனர்.

பின்னர் அலுவலர்கள் கூறுகையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடப்பதால், உழவர்சந்தை எதிரே உள்ள கால்வாய்கள் கட்டப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வந்து செல்ல  சிரமம் ஏற்பட்டது. அதற்காக தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டது. கால்வாய் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால், தற்போது திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்றார். இதனையடுத்து வேளாண் துறை அதிகாரிகள் உழவர் சந்தையை மீண்டும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்தனர். தற்போது உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர். அப்போது, பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கே.பி.ஜார்ஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் பத்பநாபன், டில்லீஸ்வரி அரி, ஏ.எஸ்.தரணி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Guduvancheri ,
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...