×

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் தவிப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, தி.நகர், ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் இந்த பேருந்துகளை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த பகுதியில், அனகாபுத்தூர் அரசுப்பள்ளி அருகே உள்ள அம்பேத்கர் சிலை பஸ் நிறுத்தத்தை தினசரி நூற்றுக்ணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு நிழற்குடை வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் வெயிலில் பஸ்சுக்காக காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தினசரி ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இருக்கை வசதி இல்லாததால் வயதானவர்கள், நோயாளிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

தற்போது வெயில் காலம் ஆரம்பித்துள்ளதால், ஒதுங்குவதற்கு நிழல் கூட இன்றி வெயிலில் வாடி வதங்கும் நிலை உள்ளது. குறிப்பாக, அருகிலேயே இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பஸ்சுக்காக சாலையில் ஆங்காங்கே தாறுமாறாக நிற்கின்றனர். இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் மாணவர்கள் மீது மோதி, சிறுசிறு விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஏற்கனவே குறுகி உள்ள சாலையில், இதனால், கடும் நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பயணிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...