பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தால் கடல் மாசடைகிறதா என விஞ்ஞானி குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: மணலியில் அமைந்துள்ள தனியார் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களால் கடல் மாசடைகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள விஞ்ஞானிகள் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.சென்னை ராயபுரத்தை சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2013ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், தமிழ்நாடு பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கிறது. இதனால் கடல் வளம் பாதிக்கப்படும். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மகேஸ்வரன் ஆஜராகி வாதாடினார்.

அப்போது மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்ற மூத்த விஞ்ஞானி ஆகியோரை கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்த கமிட்டி மணலி பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாடு பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனம் ஆகியவை மாசுவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொண்டுள்ளனவா? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகள்படி தான் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கடல்நீரின் தரம் மேம்பட்டுள்ளதா?, அவ்வாறு இல்லாதபட்சத்தில் எப்படி கடல்நீரின் தரத்தை மேம்படுத்த முடியும்? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: