×

உலக சாதனைக்காக 3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய நாமக்கல் வாலிபர்

நாமக்கல், பிப்.17:  நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று, 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி வாலிபர் உலக சாதனை படைத்தார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று தொடர்ச்சியாக 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாமக்கல் அருகேயுள்ள கணவாய்பட்டியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மோகன்ராஜ் (27), காலை 8 மணி முதல் 11 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். மோகன்ராஜூக்கு நோபல் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள், சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி பாராட்டினர். மேலும் சிலம்பம் சுற்றுவதை பார்க்க வந்திருந்த பலரும் கைத்தட்டியும் ஆராவாரம் செய்தும் மோகன்ராஜை உற்சாகப்படுத்தினர்.

இது குறித்து மோகன்ராஜ் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுவருகிறேன். பயிற்சி பள்ளியும் வைத்து, மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கிறேன். சிலம்பத்தில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 3மணி நேரம் சிலம்பம் சுற்றியுள்ளேன். சிலம்ப கலையின் தனித்துவத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை நடத்தினேன்,’ என்றார். நோபல் உலக சாதனை புத்தக பிரதிநிதி ஜெயபிரதாப் கூறுகையில், ‘ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றியது தான் இதற்கு முன் சாதனையாக இருந்தது. தற்போது மோகன்ராஜ் 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்,’ என்றார்.

Tags : youngster ,Namakkal ,world ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி