×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் குடிமகன்கள் அட்டகாசம்

அருப்புக்கோட்டை, பிப்.17: சுற்றுச்சுவர் இல்லாததால் அருப்புக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு குடிமகன்கள் குடித்து கூத்தடிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள டிஆர்வி சாலையில் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் ஒரு டாக்டர் உள்பட பார்மஸிஸ்ட், லேப் டெக்னிசியன், செவிலியர் உட்பட 10க்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தினந்தோறும் வெளிநோயாளிகளாக 200க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். 24 மணி நேரமும் இந்த சுகாதார நிலையம் இயங்கக்கூடியது.
இதற்கு சொக்கலிங்கபுரம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், தெற்கு மகாராஜபுரம், டெலிபோன் ரோடு, எஸ்பிகே பள்ளி ரோடு, சாலியர் நடுநிலைப்பள்ளி, ஆகிய பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களிலிருந்தும் சிகிச்சைக்கு வருகின்றனர். வாரந்தோறும் செவ்வாய்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அத்துடன் கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவமாவதற்காக பேறுகால முன்கவனிப்பு, பின்கவனிப்பு, தடுப்பூசி என சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு டாக்டர் மட்டும் இருப்பதால் சாதாரண சிகிச்சைக்கு வரும் வெளிநோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் சரிவர சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக ஒரு பெண் டாக்டர் நியமிக்க வேண்டும். மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய இருக்கை வசதி இல்லை. இதனால் கால்கடுக்க நின்றுகொண்டு அவதிப்படுகின்றனர். மேலும் திருச்சுழி ரோட்டில் இருந்து டிஆர்வி சாலை வழியாக இந்த மருத்துவமனைக்கு வரும் பகுதி முழுவதும் தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அவசர சிகிச்சைக்கு இரவு நேரங்களில் வரும் பெண்கள் பயப்படுகின்றனர். மேலும் சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும் போது நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதே பகுதியில் தான் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கிருந்து மது வாங்கிக்கொண்டு வரும் நபர்கள் சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் சுற்றி அமர்ந்து கொண்டு மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். அத்துடன் சுகாதார நிலைய பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். புகைபிடித்துக் கொண்டும், பாட்டில்களை சுகாதார நிலையத்தை சுற்றிலும் ஆங்காங்கே வீசிவிட்டும் செல்வதால் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் மதுபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்து மாத்திரை, மருந்து கேட்டு பணியாளர்களிடம் தகராறு செய்கின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மருத்துவ அலுவலர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஆனால், இதுவரை இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. எனவே ,சுகாதார நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டவும், ஜெனரேட்டர் வசதி, இரவு காவலர் நியமனம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,health center ,
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு