×

தெருவில் நடந்து செல்ல முடியவில்லை விரட்டிவிரட்டி கடித்து குதறும் தெருநாய்கள் பொதுமக்கள் பீதி

சிவகங்கை, பிப்.17:  சிவகங்கை மாவட்டத்தில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லாததால் பொதுமக்களை கடித்து குதறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே பராமரிப்பின்றி தெருவில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவைகள் குப்பைகள் தேங்கும் இடங்கள், குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், கோழி மற்றும் ஆடு இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் மிச்சமாக கொட்டும் உணவுகள் கொட்டப்படுவதை உண்பதற்காகவும் ஏராளமான நாய்கள் பள்ளி அருகிலும் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்களில் ஏராளமானவை தற்போது வெறி பிடித்த நிலையில் உள்ளன. நகரின் பிரதான பகுதிகளில் இந்த நாய்கள் அதிகமாக திரிகின்றன. இவைகள் தினந்தோறும் சாலையில் செல்பவர்களை கடித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் நாய்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரைத்து சத்தமிடாமல் திடீரென கடித்துவிடும் இந்த நாய்களால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டு, அருவருக்கத்தக்க நிலையில் உள்ள இந்த நாய்கள் பொதுமக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இவைகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கூறியதாவது: நாய்க்கடியால் உருவாகும் நோயால் மிகப்பெரிய பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆனால் தெருவில் பராமரிப்பில்லாமல் திரியும் நாய்களையும், வெறிநாய்களையும் ஒழிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மனிதர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாய்கள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளில் புகார் செய்தால் கண்டுகொள்வதில்லை. நாய்களை கட்டுப்படுத்தும் துப்புரவு பணியாளர்கள் மீது தேவையின்றி வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு ஊழியர் ஒருவர் கூறியதாவது: நாய்கள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்துவது குறித்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்கின்றனர். இதில் காலதாமதம் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : panic ,street ,
× RELATED கொரோனா பீதி...சென்னையில் சோதனை...